மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மீண்டும் பொறுப்பேற்றார். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் நேற்று அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது.
ஏற்கெனவே, முதல்வர் உத்தவ் தலைமையிலான அமைச்சரவையில் அறுவர் இடம்பெற்றிருந்தனர். நேற்று 36 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பத்துப் பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப் பட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக அஜித் பவார் பதவிப் பிரமாணம் செய்திருக்கிறார்.
அவர் ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து, துணை முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பில் இருந்தார்.
ஆனால் 80 மணி நேரம் மட்டுமே நீடித்திருந்த பாஜக ஆட்சி, சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாததால் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார் அஜித் பவார். எனினும், அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைப்பது சாத்தியமல்ல எனக் கூறப்பட்டது. ஆனால், மீண்டும் துணை முதல்வராகிவிட்டார் அஜித் பவார்.