புதுடெல்லி: இந்திய கடற்படை வீரர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாக எதிரி நாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியத் தகவல்களை கசியவிட்டதாக கடற்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடற்படை வீரர்களுக்கு இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் தகவல்கள் திருட்டுப் போகாமல் இருக்க, இத்தகைய நடவடிக்கை தேவைப்படுவதாக கடற்படை வட்டாரத் தகவல்கள் கூறின.
இந்தத் தடையின் காரணமாக இந்திய கடற்படை வீரர்கள் இனி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும். மேலும், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வணிகத் தளங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடற்படைத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருக்கும்போது வீரர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தவும் கடற்படை தடை விதித்துள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.