புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். மாநிலங்களின் பாரம்பரியத்தையும், சிறப்பையும் பறைசாற்றும் விதமாக அணிவகுப்பு காட்சிகள் அடங்கிய அலங்கார வண்டிகள் இடம்பெறுவது வழக்கம்.
இதையொட்டி, பல்வேறு மாநிலங்கள் தங்களின் படைப்புகள் அடங்கிய முன்மொழிவு அட்டவணைகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தன. குடியரசு தின விழா அணிவகுப்பில் 32 மாநிலங்களில் 16 மாநிலங்களின் அணிவகுப்பு இடம்பெறும் என மத்திய அரசு அறிவித்தது.
நேரக்கட்டுப்பாடு காரணமாக, பல மாநிலங்கள் இடம்பெற முடியவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதில் மேற்குவங்காளம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் சார்பில் இடம் பெறுவதாக இருந்த அலங்கார ஊர்திகளில் இடம்பெற்ற காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருந்ததாக ஆய்வுக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டதால் மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. அதுபோல மத்திய அமைச்சர்களும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல் மராட்டியத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பில் மகாராஷ்டிர அலங்கார வண்டி இடம்பெறாதது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், குடியரசு தினம் என்பது நாட்டின் திருவிழா. இதில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதுடன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வேறு விதமாக நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடக்கும் அணிவகுப்பில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் பங்கேற்க உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் அணிவகுப்பில் இடம்பெற அனுமதி இல்லை.