புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் இதுவரை கண்டிராத பெரும் நிதிச்சுமையில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, காய்கறிகள் தட்டுப்பாடு, அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக சம்பள பாக்கி என புதுச்சேரி அரசு திணறிக்கொண்டிருக்கிறது.
அதேபோல பாப்ஸ்கோ, கான்ஃபெட், அமுதசுரபி உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்குகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாகனங்களுக்குக் கடனில் பெட்ரோல், டீசல்கள் நிரப்பப்பட்டு வந்தன. அரசுத் தரப்பில் இருந்து வரவேண்டிய தொகை வராததால் நஷ்டத்தில் இயங்கிய பாப்ஸ்கோ, கான்ஃபெட் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.
அமுதசுரபி பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அரசுத் தரப்பு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கியதற்கு சுமார் 2.30 கோடி ரூபாய் இந்த நிறுவனத்துக்கு வரவேண்டி உள்ளது.
நிலுவைத் தொகை அதிகமான தால் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை ஜனவரி 1 முதல் இந்நிறுவனம் நிறுத்திவிட்டது. அதனால் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தமது அரசு வாகனத்தை அரசிடமே ஒப்படைத்துவிட்டு பேருந்தில் பயணம் செய்து வருகிறார். தினமும் காரைக்காலில் இருந்து புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு பேருந்தில் பயணம் செய்யும் அமைச்சர் கமலக்கண்ணன் சொந்தக் காசில் பயணச்சீட்டு வாங்கிக்கொள்வதாகவும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.