இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல ஆண்டுகளாக வேர்க்கடலை வியாபாரம் செய்துவரும் தமிழர் ஒருவர், தாம் வசிக்கும் ஊரில் உள்ள 87 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கவிருக்கிறார்.
தமிழகத்தின் புளியங்குடியைச் சேர்ந்தவர் திரு அப்துல்லா என்ற மணி. இவர் 1982ஆம் ஆண்டு பிழைப்புத் தேடி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு வேர்க்கடலை வியாபாரம் செய்யும் கடை ஒன்றில் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். தள்ளுவண்டியில் வேர்க்கடலையை வைத்துக்கொண்டு, கடக்கல் நகர் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வாராம். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, பின் சொந்தமாக ஒரு வேர்க்கடலை கடையை இவர் தொடங்கினார்.
வியாபாரம் செழிக்கவே, தம்மை வாழவைத்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று இவர் விரும்பினார். இதையடுத்து, பத்து லட்ச ரூபாயைச் செலவழித்து கோட்டபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை இவர் வாங்கினார்.
பின் அந்த நிலத்தை, நிலமற்ற குடும்பங்களுக்குப் பகிர்ந்து அளிக்க விரும்புவதாக பஞ்சாயத்துத் தலைவர் ஆர்.எஸ். பிஜுவிடம் இவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தனது நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் நிலமற்ற 125 குடும்பங்களைப் பஞ்சாயத்து பட்டியலிட்டது. அதில் உள்ள 87 குடும்பங்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கப்படவுள்ளது.
நிலத்திற்கான ஆவணங்களை பஞ்சாயத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவிருக்கிறார்.
பின் அந்த இடங்களில் ‘வாழ்க்கை இலக்கு’ என்ற திட்டத்தின்கீழ் பஞ்சாயத்தே அந்தக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர இருக்கிறது.
பிழைப்புத் தேடி வெளியூருக்குச் சென்று, பொருளீட்டியபின் சொந்த ஊருக்குத் திரும்புவோர் மத்தியில், தமக்கு வாழ்வளித்த ஊருக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்றெண்ணி, பலரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க உதவிய திரு மணியின் நற்செயலை கேரள மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.