புதுடெல்லி: டெல்லியில் மிக விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் ஜோதிடர்களை நாடிச்செல்லத் துவங்கி உள்ளனர். இதையடுத்து ஜோதிடர்களின் மவுசு அதிகரித்துள்ளது.
டெல்லியின் வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரக்கூடும்.
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. தங்களால் மீண்டும் வெற்றி பெற முடியும் என முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் பிரமுகர்கள் ஜோதிடர்களை வலம் வருகிறார்கள்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா? அவ்வாறு கிடைத்தாலும் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்விகளுக்கு விடை கேட்டு தங்களது ஜாதகங்களுடன் ஜோதிடர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
ஒருசிலர் ஜோதிடர்களின் அறிவுரைப்படி சிறப்புப் பூசைகள் நடத்தவும், குறுகிய கால ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவும் தயாராகி வருவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.