புதுடெல்லி: அண்மையில் டெல்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையில் இது அம்பலமானது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லியில் அவ்வப்போது திடீர் போராட்டங்கள் வெடிக்கின்றன.
இந்நிலையில் அண்மைய வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. சீமாபுரி பகுதியில் நடந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்களால் போலிசார் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அச்சமயம் போலிசார் மீது பெட்ரோல் குண்டுகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டன.
கலவரம் வெடித்த சில நிமிடங்களிலேயே போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த சில தினங்களாக நடந்த விசாரணையில், டெல்லி வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருந்த 15 பங்ளாதேஷிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றனர்.
மேலும் பல பங்ளாதேஷிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.