லக்னோ: கல்குவாரிக்காக புதிதாக கட்டப்பட்டு வந்த பெரிய சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது.
அங்குள்ள லட்சுமன்புரா கிராமத்தில் அந்த கல்குவாரி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்ட சுவரின் வெளிப்
பகுதியில் தொழிலாளர்கள் சிலர் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென அந்தச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
சுனிதா என்ற பெண்ணும் அவரது இரண்டு வயது மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார், உள்ளூர் மக்களின் உதவியோடு காயமடைந்தவர்களை மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.
சுவர் கட்டும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் தரமான பொருட்களைப் பயன்படுத்தாததே சுவர் இடிந்து விழக் காரணம் என பாதிக்கப்பட்டோர் புகார் எழுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் மீதும் கல்குவாரி உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.