புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் இடைக்காலத் தலைவி சோனியா தெரிவித்துள்ளார்.
அங்குள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க இந்திய அரசு உரிய வகையில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவேண்டும்,” என்றும் சோனியா காந்தி மேலும் வலியுறுத்தி உள்ளார்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தார். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
இதன் மீது அண்மையில் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அந்நேரம் அக்குருத்வாராவுக்கு வந்த சீக்கிய யாத்திரிகர்கள் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் தெரிகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.