அமராவதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றுவதற்கான அதிகாரத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் அளிக்கவில்லை என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது ஒரு முட்டாள்தனமான முடிவு என்றும் இதற்குரிய விலையை முதல்வர் ஜெகன்மோகன் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஆட்சிக் காலத்தில் அமராவதியை ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் சந்திரபாபு நாயுடு.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளார் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன்.
இதனால் தனது கனவு சிதறிப் போய்விட்டது என்று சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருப்பதால் தலைநகரை மாற்றுவதற்கான அதிகாரம் நடப்பு முதல்வருக்குக் கிடைத்துவிட்டதாகக் கருதக்கூடாது.
“எங்களிடம் அதிகாரம் இருந்ததால் அமராவதியைத் தலைநகராகத் தேர்வு செய்யவில்லை.
“பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே அமராவதியைத் தேர்வு செய்தோம். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏனெனில் இது பல்வேறு தரப்பினரும் சேர்ந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
“நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து புனித நீரும் புனித மண்ணும் சேகரிக்கப்பட்டு அமராவதிக்குக் கொண்டு வரப்பட்டன.
“இந்நிலையில் அந்த முடிவில் இருந்து எப்படி திடீரென பின்வாங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
“முதல்வர் ஜெகன்மோகன் உங்களைத் தனிப்பட்ட வகையில் பழிவாங்குகிறாரா?,” என்ற கேள்விக்குப் பதிலளித்த சந்திரபாபு நாயுடு, “என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களைத் தண்டிப்பது ஏன்?,” என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.