புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அதன் தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.
அந்நிறுவனம் தனியார்மயம் ஆக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஏர் இந்தியாவை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும் என அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும் எனும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது. அந்நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என்பதால் விமானப் பயணிகளும் முகவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இன்றளவும் ஏர் இந்தியா விளங்குகிறது,” என்று அஷ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா கடும் நிதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனியார்மயமாக்கும் நடவடிக்கை முடிவுக்கு வரும் வரை, ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.
இந்நிவையில் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என அதன் தலைவர் அஷ்வானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தில் 14 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.