புதுடெல்லி: பாகிஸ்தான் இந்துப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘நாகரிகத்தா’ எனப் பெயர் சூட்டினார். இதற்கு தமிழில் குடியுரிமை என்று அர்த்தமாகும்.
ஞாயிற்றுக்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது பாகிஸ்தானில் குடியுரிமை மறுக்கப்பட்டதால் இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ள ஆர்த்தி என்பவரின் குடும்பத்தைச் சந்தித்துப் பேசினார்.
தனது குழந்தைக்குப் பெயர் சூட்டும்படி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார் ஆர்த்தி. இதையடுத்து குழந்தைக்கு ‘நாகரிகத்தா’ எனப் பெயர் சூட்டினார் ரவிசங்கர் பிரசாத்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்த்தி, இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்டார்.
“எங்கள் மகள் தான் வீட்டின் லட்சுமி. அவளது பிறப்பால் நமது குடியுரிமையின் பாதை திறக்கப்பட்டுள்ளது,” என்றார் ஆர்த்தி. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆர்த்தி தெரிவித்தார்.