ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது தொடர்பில் மாநில அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அம்மாநில துணை முதல்வரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் முந்தைய பாஜக அரசை குறை சொல்லி ஒரு பலனும் இல்லை என செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இறந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்ததற்கு முந்தைய பாஜக அரசின் திறனற்ற, நிர்வாகமின்மையே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சாடியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் அதற்கு நேர்மாறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
“ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. எனவே, இதற்கு கடந்த கால அரசை குறை சொல்வது தவறாகும். இதற்கு பொறுப்பேற்காமல் தட்டி கழித்துவிட்டு தப்பியோட முடியாது.
“கடந்த காலத்தைக் கைவிட்டு இச்சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார் சச்சின் பைலட்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனால் அம்மாநில காங்கிரசில் கோஷ்டிப்பூசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சச்சின் பைலட் தெரிவித்த கருத்தால் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் 2 அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 522 குழந்தைகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.