புதுடெல்லி: எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவசேனா சார்பில் சரத்பவாரின் பெயர் அதிபர் பதவிக்குப் பரிந்துரை செய்யப்படும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் அளவுக்கு தங்களின் பலம் 2022க்குள் அதிகரிக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“சரத்பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர். அடுத்த அதிபர் தேர்தலில் அவரது பெயரை அனைத்து கட்சிகளும் பரிந்துரைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
“2022ஆம் ஆண்டுக்குள் எங்களின் பலம் அதிகரிக்கும். மற்ற அரசியல் கட்சிகளும் எங்களின் பரிந்துரையை ஏற்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் சஞ்சய் ராவத்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமைய சரத்பவார் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெகுவாகக் கைகொடுத்தன. இதையடுத்து அவரை அதிபர் பதவி வேட்பாளராக முன்மொழிய சிவசேனா முடிவெடுத்துள்ளது.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான சரத்பவார் மத்திய அமைச்சராகவும், நான்கு முறை முதல்வராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். எனவே அதிபர் பதவிக்கு இவர் பொருத்தமானவர் என சிவசேனா கருதுவதாகக் கூறப்படுகிறது.