புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்கள், மற்ற கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் என மத்திய அரசு ஒருபோதும் பிரித்துப் பார்க்காது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாட்டில் பல்வேறு துறைகள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“பட்ஜெட்டுக்காக காத்திருக்காமல் சவால்களை எதிர்கொள்ளும் துறைகளுக்கு உதவ விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் உரிய நேரத்தில் எடுக்கப்படுகின்றன.
“மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல,” என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மாநிலங்களுக்கு தேவையான நிதி 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மாதம் 1 லட்சம் கோடி ரூபாயை கடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
வரும் நாட்களில் வரிவருவாய் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு உரிய நேரத்தில் நிதி ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பிற கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு திருப்திகரமாக இல்லை என்றும் அக்கட்சிகள் மேலும் சாடியுள்ளன.