இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு கம்புகள், இரும்புத் தடிகளுடன் கும்பல் ஒன்று அங்கு அத்துமீறி நுழைந்தது. திடீரென்று வளாகத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல் பல்
கலைக்கழக மாணவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் மாணவர் சங்க தலைவர் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மாணவர்களின் விடுதி
களுக்குள்ளும் நுழைந்த தாக்குதல்காரர்கள் அங்கு இருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு புதுடெல்லி போலிஸ் ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஹிட்லரின் ‘நாஸி’ ஆட்சியை நினைவுபடுத்துவதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
“இளைஞர்களுக்கு மத்தியில் நீங்கள் ஏன் பகைமையை உருவாக்குகிறீர்கள். இளைஞர்களின் குரலை எந்த அளவுக்கு நீங்கள் ஒடுக்குகிறீர்களோ அந்த அளவுக்கு அது வீறு கொண்டு எழும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை 90 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘நாஸி’ ஆட்சியை நினைவுப்படுத்துகிறது,” காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.
முகமூடி அணிந்த சமூக விரோத கும்பலால் மாணவர்கள் தாக்கப்பட்டபோது, டெல்லி போலிஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். போலிசாரின் இந்தச் செயலை இந்திய அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலர் சாடியுள்ளனர்.
மாணவர்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இரும்பு தடிகளைக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்குதல்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“ஜவஹர்லால் நேரு பல்கலைக்
கழக வளாகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலிசார் வன்முறையைத் தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் பல்
கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் நாடு எப்படி முன்னேறும்?” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் அதிருப்தி தெரிவித்தார்.
மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு ராகுல் காந்தியும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஜவஹர்லால் நேரு பல்
கலைழக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஃபாசிஸ்ட்டுகள் நாட்டைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். மாணவர்களின் துணிச் சலான குரல்களுக்கு நாட்டை கட்டுப்படுத்தும் ஃபாசிஸ்ட்டுகள் அஞ்சுகிறார்கள். இந்தத் தாக்குதல் பிரதமர் மோடியின் அரசுக்கு வந்துள்ள அச்சத்தைக் காட்டுகிறது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
தாக்குதலின் எதிரொலியாக டெல்லி போலிசின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், இந்த வன்முறைச் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர். ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் திரண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேபோல், புனேவில் திரைப்
படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சிக் கழகத்தில் பயிலும் மாணவர்கள், டெல்லியில் நடந்த தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகு வர்த்தி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆஃப் இந்தியா முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் காயமடைந்தோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.