புதுடெல்லி: ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்த டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் பெயர் ஜோதி சிங் என்பது தெரியவந்துள்ளது.
இதுநாள் வரை நிர்பயா என்றே அவர் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டார். இந்நிலையில், ஜோதி சிங் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நால்வரையும் தூக்கிலிட தாம் தயாராக இருப்பதாகவும், தமக்கு மன ரீதியிலான அழுத்தம் ஏதுமில்லை என்றும் கூறுகிறார் பவான் ஜலாத்.
இவர் மீரட் சிறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர். ஜோதி சிங் (நிர்பயா) வழக்கின் குற்றவாளிகளை இவர்தான் வரும் 22ஆம் தேதி தூக்கிலிடப்போகிறார்.
பவான் ஜலாத் குடும்பத்தினர் கடந்த 4 தலைமுறைகளாக இந்தப் பணியைச் செய்து வருகின்றனர்.
இவரைப் போன்றவர்கள் சிறைச்சாலையின் தற்காலிக ஊழியர்களாகக் கருதப்படுகின்றனர். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக மட்டும் அவ்வப்போது அழைக்கிறது காவல்துறை.
போர்வைகள் விற்பனை செய்து வரும் பவான் ஜலாத், இதுவரை ஒருமுறை கூட தூக்கிலிடும் பணியைச் செய்ய முடியவில்லை. எனினும் அனைத்து நடைமுறைகளும் தமக்குத் தெரியும் என்கிறார்.
"நான்கு குற்றவாளிகளையும் தூக்கில் போடும் இந்தப் பணியைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இது போன்ற கொடிய குற்றவாளிகளைக் கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியைச் சொல்வதாக அமையும்," என்கிறார் பவான் ஜலாத்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒருவித ஆறுதல் கிடைக்கும் என்றும் அதன் காரணமாகவே இந்தப் பணியைத் தாம் மகிழ்ச்சியுடன் செய்யப்போவதாகவும் பவான் ஜலாத் கூறுகிறார்.
இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மும்பைக் குண்டுவெடிப்பு கைதி யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டான். அதன் பிறகு ஒரே சமயத்தில் நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைப் பார்க்க வந்த ஜோதி சிங்கின் தாயாரிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் தாயார், தன் மகனை மன்னிக்கும்படி கண்ணீர் மல்க மன்றாடினார்.
அதற்கு, 'எனக்கும் ஒரு மகள் இருந்தாள்' என்று ஜோதி சிங்கின் தாயார் பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதியிடம் முகேஷின் தாய் கோரிக்கை விடுத்தார். நீதிபதி அதை ஏற்க மறுத்தார்.
ஒரு தாய் மகனுக்காகவும், ஒரு தாய் மகளுக்காகவும் நடத்தி வந்த சட்டப் போராட்டம் வரும் 22ஆம் தேதியுடன் முடிவடைய வாய்ப்பு உள்ளது.

