புதுடெல்லி: அவசர, அவசிய காரணங்கள் இல்லையெனில் இந்தியர்கள் ஈராக்கிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்லவேண்டாம் என இந்திய அரசு எச்சரித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையே தற்போது கடும் மோதல் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது.
"போர் பதற்றம் நிலவுவதால் ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா வான் பகுதியை இந்திய விமானங்கள் பயன்படுத்த வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை, இந்தியர்கள் எந்தவித அத்தியாவசிய தேவையும் இல்லாமல் ஈராக் செல்ல வேண்டாம்.
"ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு பாக்தாத், ஏர்பிலில் உள்ள தூதரகங்கள் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்," என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தி இருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
எனவே அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் முற்றினால் அது இந்தியாவையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

