புதுடெல்லி: இந்தியாவின் பொருளியல் 2019-20ல் முன்பு எதிர்பார்த்த அளவுக்கு வளராது என்றும் வளர்ச்சி 5 விழுக்காடு மட்டுமே இருக்கும் என்றும் உலக வங்கி இப்போது கணித்து இருக்கிறது.
அந்த வங்கி இந்தியப் பொருளியல் 6 விழுக்காடு வளரும் என்று ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், பொருளியலை உசுப்பிவிடும் நோக்கத்தில் பிரதமர் மோடி நேற்று பொருளியல் வல்லுநர்களையும் நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, கடந்த திங்கட்கிழமை முக்கிய தொழிலதிபர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இந்தியப் பொருளியல் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருவதன் தாக்கத்தை அந்த நாட்டு மக்கள் உணரத் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றாட குடும்பச் செலவு முதல் ஆடம்பர திருமணம் வரை மக்கள் செலவுகளைப் படிப்படியாகக் குறைத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
பணக்கார இந்தியர்கள் நடத்தும் திருமணங்கள் உலகளவில் பிரபலமானவை.
இந்திய திருமண தொழில்துறையின் வருடாந்திர மதிப்பு சுமார் US$50 பில்லியன் (S$67பில்லியன்) என்று மதிப்பிடப்படுகிறது. சமூக அந்தஸ்தைக் கருதி பல குடும்பங்கள் ஆடம்பரமான திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுண்டு.
ஆனால் இப்போது அத்தகைய குடும்பங்களில் பல குடும்பங்கள் செலவுகளை மிகவும் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பொருளியல் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறங்கிவிட்டது. வேலையில்லாத விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கூடிவிட்டது. தாறுமாறாக விலைகள் ஏறி வருகின்றன.
இதன் காரணமாக மக்கள் எல்லா செலவுகளையும் குறைக்கிறார்கள் என்று தெரியவருகிறது. பாஜக அரசாங்கத்தின் செல்லா நோட்டு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பலவும் விரும்பிய பலன்களைப் போதிய அளவுக்கு ஏற்படுத்தவில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.