தமிழகத்தில் 14% பதின்ம வயதினருக்கு உடல் பருமன்

தமிழகத்தில் 14% பதின்ம வயதினருக்கு உடல் பருமன்

2 mins read
596c879b-adb5-465e-aded-ebb7b42ca357
தமிழ்நாட்டில் பதின்ம வயது மாணவர்களில் 14 விழுக்காட்டி னருக்கு உடல்பருமன் இருப்பதாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலவரம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்நாட்டில் பதின்ம வயது மாணவர்களில் 14 விழுக்காட்டினர் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலவரம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இத்தகைய நிலையை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் சேரும் பதின்ம வயதினரில் 1.5 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நிலை இருக்கிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவனே நல்ல மாணவன் என்று இந்தியக் கல்வி முறை கூறுகிறது என்றும் ஆனால் விளையாட்டு, உடல்நலம், படிப்பு அனைத்திலும் சிறந்து விளங்கும் மாணவனே நல்ல மாணவன் என்றும் ராயல் சொசைட்டி என்ற அமைப்பின் ஆய்வு வல்லுநரான ககன்தீப் காங் தெரிவித்தார்.

இந்திய சிறார்களுக்குப் போதிய சத்துணவு இல்லாத குறையும் அதோடு நீரிழிவு, கெட்ட கொழுப்பு, சிறுநீரக நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது என்றும் இந்தியாவின் சுகாதார அமைச்சு அண்மையில் வெளியிட்ட தேசிய சத்துணவு ஆய்வு தெரிவிக்கிறது.

கிராமப்புற சிறார்களுடன் ஒப்பிடுகையில் நகர் புறங்களில் வசிக்கும் இளையர்களுக்கே அதிக உடற்குறைகள் ஏற்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

நவீன உணவு வகைகளும் உடற்பயிற்சி இல்லாத நிலையும் செல்வச் செழிப்பும் பதின்ம வயதுப் பிள்ளைகளிடையே அதிக உடல்பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றாவிட்டால் பிள்ளைகள் வளர வளர அவர்கள் எதிர்நோக்கக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதனிடையே, சென்னையில் ஒரு விரிவுரை நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் வல்லுநரான சௌமியா சுவாமிநாதன், இந்தியாவின் சுகாதார அமைச்சு அதிக இனிப்பு, அதிக உப்பு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கு அதிகமான வரியை விதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

விற்கப்படும் உணவுப் பொருட்களில் உப்பு, கொழுப்பு, சர்க்கரை முதலானவை எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பயனீட்டாளர்களுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிவிக்கப்படுவதை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிறார்கள் உடல் உழைப்பிலும் நலமிக்க உணவுகளிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் இதனை பெற்றோர்கள் உறுதிப் படுத்த வேண்டும் என்றும் வல்லு நர்கள் தெரிவித்தனர்.