தினமும் 80 கொலை, 91 பாலியல் கொடுமை

தினமும் 80 கொலை, 91 பாலியல் கொடுமை

2 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த (2018) ஆண்டு சராசரியாக தினமும் 80 கொலைகளும் 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் 289 கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், "2017ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 50,07,044 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுவே 2018ஆம் ஆண்டில் 50,74,634ஆக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 31,32,954 வழக்குகள் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழும் 19,41,680 வழக்குகள் சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"மேலும் கடந்த ஆண்டில் 29,017 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.3 விழுக்காடு அதிகம். அந்த ஆண்டில் 28,653 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.

"ஆள்கடத்தல் தொடர்பான சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் 88,008 கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில் 2017ஆம் ஆண்டு 95,893 கடத்தல் வழக்குகளும் 2018ஆம் ஆண்டில் 1,05,734 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

"கடந்த ஆண்டு கடத்தப்பட்டவா்களில் 63,356 போ் சிறாா்கள், 9,415 போ் ஆண்கள்; 32,765 போ் பெண்கள்.

"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2016ல் 3,38,954 வழக்குகளும் 2017ல் 3,59,849 வழக்குகளும் கடந்த ஆண்டு 3,78,277 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

"இவற்றில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மட்டும் 2016ல் 38,947, 2017ல் 32,559, 2018ல் 33,356 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன," என்று புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. குறிப்பாக 2016ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.