அகமதாபாத்: இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆலமரத்தில் தொங்கவிட்ட சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அகமதாபாத் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாய்ரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் தனது சகோதரியுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து பெண்ணின் தந்தை போலிசில் புகார் செய்தபோதும் அது ஏற்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கூறினர்.
ஜனவரி 1 அன்று காணாமல் போன அப்பெண் வீடு திரும்ப வில்லை. ஜனவரி 5ஆம் தேதி சாய்ரா கிராமத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் அந்தப் பெண்ணின் உடல் தூக்கிலிடப்பட்ட நிலையில் தொங்கியது. பெண்ணின் சகோதரி அளித்த தகவலின்பேரில் பெண்ணை கடத்தியது பிமல் பர்வாத், தர்ஷன் பர்வாத், சதீஷ் பர்வாத், ஜிகார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த நால்வர் மீதும் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இறந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ததில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அப்பெண்ணை காரில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பெற்றோர், உறவினர், கிராமப் பொதுமக்கள் ஆகியோருடன் சமூக நல ஆர்வலர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

