கேரளாவில் கட்டுமான விதி மீறல்; கட்டடங்கள் வெடி வைத்து தகர்ப்பு

கேரளாவில் கட்டுமான விதி மீறல்; கட்டடங்கள் வெடி வைத்து தகர்ப்பு

2 mins read
4cde7fde-80c4-422b-ac0b-0f054ea2b8c2
19 மாடிகளைக் கொண்ட 'ஹெச்2ஓ ஹோலி ஃபெய்த்' கட்டடம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. படம்: ஏஎஃப்பி -

கேரள மாநிலத்தில் கடலோர கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

கொச்சி அருகே மராடு நகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட ஹெச்2ஓ ஹோலி ஃபெய்த், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற நான்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கிணங்க 19 தளங்களைக் கொண்ட ஹோலி பெய்த் கட்டடம் முதலில் தகர்க்கப்பட்டது.

அடுத்ததாக, ஆல்ஃபா ஷெரின் கட்டடமும் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. முன்னதாக, கட்டடங்களில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி காலை 8 மணிக்கு நிறை

வடைந்தது. கட்டடங்கள் இடிந்துவிழுந்த பகுதியில் மிகப்பெரிய புழுதிப்படலம் ஏற்பட்டது.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டனர். மராடு பகுதியிலுள்ள வீடுகள் அனைத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீா்வழி, வான்வெளி, சாலைவழி என அனைத்து வழி போக்குவரத்துக்கும் அந்தப் பகுதியில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நவீன முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக இரு கட்டடங்களும் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக இவ்விரு கட்டடங்களின் 200 மீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் எதிர்ப்பு எழாதவாறு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எஞ்சிய இரு கட்டடங்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் 343 வீடுகள் இருந்தன. இந்தக் குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.