டிரக் மீது மோதிய பேருந்தில் திடீர் தீ: லக்னோ: இருபது பேர் கருகி மரணம்

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் இருபது பேர் உடல் கருகி மாண்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

கன்னோஜ் மாவட்டம் சிப்பராமு என்ற இடத்துக்கு அருகே நெடுஞ்சாலையில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

அதிவேகத்தில் மோதியதால் இரு வாகனங்களும்  நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தன. 

இந்தப் பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் வரை தீயில் கருகி இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வில்லை. பேருந்திலிருந்து சிறுகாயங்களுடன் தப்பித்து உயிர்பிழைத்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் 45 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. சம்பவத்தையடுத்து கன்னூஜ் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மீட்புப் பணிகளில் இறங்கின. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை போராடி அணைத்தன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, “உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜில் ஏற்பட்ட விபத்து வருத்தமடையச் செய்கிறது,” என்று தனது கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“விபத்தில் பலர் உயிரிழந்து விட்டனர். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்,” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.