300 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி

1 mins read

புதுடெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் முயற்சி செய்வதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் அது கூறியது.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர்," என்று உளவுத் துறை தெரிவித்தது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ துணையோடு இந்தப் பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு பயிற்சி அளித்து, இவர்களின் செயல்பாடுகளையும் பாகிஸ்தான் ராணுவம் கண்காணித்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.

தற்போது பனிக்காலமாக இருப்பதால் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் கோடையில் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யலாம் என ராணுவத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் செக்டார் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் 'மோர்ட்டார்' ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ராணுவத்தின் சுமை தூக்கும் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த செயலுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.