சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட இந்திய போலிஸ் உயரதிகாரி

பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவருடன் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் ஒருவரையும் ஜம்மு-காஷ்மீர் போலிசார் கைது செய்தனர். அம்மூவரும் ஒரே காரில் பயணம் செய்தபோது போலிஸ் வளைத்துப் பிடித்தது.

தாவீந்தர் சிங் என்ற அந்த போலிஸ் உயரதிகாரி, கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது வீரதீரத்திற்கான ‘அதிபர் போலிஸ்’ பதக்கத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதான பயங்கரவாதிகளுள் ஒருவனான நவீத் பாபு, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலைத் தளபதி எனக் கூறப்படுகிறது. அவனும்  முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சாதாரண நிலை போலிசாகப் பணியாற்றியவன்தான்.

கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய காஷ்மீரின் புட்காம் பகுதியில் நியாய விலைக் கடை ஒன்றில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு ஏகே47 துப்பாக்கிகளுடன் மாயமான அவன், பின்னர் ஹிஸ்புல் அமைப்பில் சேர்ந்ததாகக் கூறப்பட்டது.

அம்மூவரும் சென்ற காரில் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகளையும் சில கையெறிகுண்டுகளையும் போலிசார் கைப்பற்றினர். அதேபோல, தாவீந்தர் சிங்கின் வீட்டிலிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியும் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மூன்று கையெறிகுண்டுகளும் சிக்கின.