430 மருத்துவர்கள் பணிநீக்கம்

430 மருத்துவர்கள் பணிநீக்கம்

1 mins read

நீண்டகாலமாகப் பணிக்கு வராத காரணத்தால் 430 மருத்துவர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பணியாற்றும் 480 பேரை இந்தியாவின் கேரள மாநில அரசு பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அந்த மருத்துவர்களில் 53 பேர் தகுதிகாண் பருவத்தை (புரோபேஷன்) முடித்தவர்கள் என்றும் மற்ற அனைவரும் தகுதிகாண் பருவத்தில் இருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பணிக்குத் திரும்ப அவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் இரு வாய்ப்புகளைக் கொடுத்தது என்றும் ஆயினும் அவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் பலர் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து இருக்கலாம் அல்லது வசதியான வாழ்க்கையைத் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவர்ச்சிகரமான ஊதிய விகிதம் இல்லாததால் மருத்துவக் கல்வி பயின்ற பலரும் மாநில சுகாதாரத் துறையில் சேரவும் அதில் தொடர்ந்து பணியாற்றவும் விரும்புவதில்லை என்று கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூறினர்.

இதற்கு முன்னரும் நீண்டநாட்களாகப் பணிக்கு வராத மருத்துவக் கல்வித் துறையைச் சேர்ந்த 36 மருத்துவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.