யானைய மீட்டுத் தர ஆட்கொணர்வு மனு செய்த பாகன்; நிராகரித்த நீதிமன்றம்

2 mins read
18ca257e-a643-4575-ae6c-3208f51a6d59
வனவிலங்குகளை வளர்ப்பதற்கு டெல்லி ஏற்ற நகரம் அல்ல என்பதால் அங்கு வளர்க்கப்பட்ட யானைகளை பறிமுதல் செய்து, அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புமாறு கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த ஆண்டு வனத்துறையினர் லட்சுமி யானையை அழைத்துச் சென்றனர். கோப்புப்படம்: இந்தியா -

டெல்லியின் ஷாகர்பூர் பகுதியைச் சேர்ந்த சதாம் என்பவர் லட்சுமி என்ற யானையை பராமரித்து வந்தார்.

வனவிலங்குகளை வளர்ப்பதற்கு டெல்லி ஏற்ற நகரம் அல்ல என்பதால் அங்கு வளர்க்கப்பட்ட யானைகளை பறிமுதல் செய்து, அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புமாறு கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த ஆண்டு வனத்துறையினர் லட்சுமி யானையை அழைத்துச் சென்றனர். யானையின் மீது வைத்த அளவு கடந்த பாசத்தால், தனது யானையுடன் பாகன் சதாம் தப்பிச்சென்றார்.

அதனைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடினர்.

யமுனை நதி கரையோரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் லட்சுமி யானை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிடிபட்டது.

அதனுடன் மறைந்து வாழ்ந்து வந்த சதாமும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி வனத்துறையினர் யானையை மீட்டு ஹரியானாவில் உள்ள முகாமில் அடைத்தனர்.

வனவிதிமுறைகளை மீறி யானையை வைத்திருந்ததாகக் கூறி யானைப் பாகன் சதாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 68 நாட்கள் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பின்னர் பிணையில் வெளிவந்த அவர், தனது யானையை மீட்டுதர வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் யானை லட்சுமியை 10 ஆண்டுகளாகப் பராமரித்து வருவதாகவும், தான் யானையின் நண்பன் என்பதால் யானையை தன்னிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய திரு பாப்டே, "யானை என்ன இந்திய குடிமகனா? இந்திய குடிமகன் ஒருவரை கண்டுபிடிக்க மட்டுமே ஆட்கொணர்வு மனுவைப் பயன்படுத்தமுடியும்," என்று கூறியதோடு இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்