அழகிரி: கூட்டணியில் சலசலப்பு ஏதுமில்லை

புதுடெல்லி: திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணியை பிரிக்க இயலாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடனான கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவி சோனியா காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளார். திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இச்சமயம் தமிழக அரசு நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.  அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்களை ஒதுக்கவில்லை என திமுக தலைமையை குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார் அழகிரி. அவருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.

இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைமை கூட்டியிருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இந்நிலையில் சோனியாவிடம் விளக்கம் அளித்துள்ளார் அழகிரி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள் என்றார்.
இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டதன் பேரிலேயே, திமுக தலைமையை சமாதானப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது.