குடியுரிமைச் சட்டம்; கேரள அரசு வழக்கு

புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக கேரள மாநில அரசு அதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25வது பிரிவுகளை மீறுவதாகவும் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும் கேரளா அரசு கூறியுள்ளது.

2014 டிசம்பா் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்துவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

கேரளாவில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருகின்றன.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.