அடுத்த நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும்: அமேசான்

புதுடெல்லி: அடுத்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் தோற்றுநரும், தலைமை நிர்வாகியுமான  ஜெஃப் பெசாஸ் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்த அவர், எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து சுமார் பத்து பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமேசான் ஏற்றுமதி செய்யும் என்றார்.

“21ஆம் நூற்றாண்டு மிக முக்கியமானது. அது இந்தியாவுக்கான நூற்றாண்டாக இருக்கப்போகிறது. 

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் இருந்து அமேசான் ஏற்றுமதி செய்யும்,” என்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை முக்கிய வளரும் சந்தையாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.

“புதுடெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வானது இதுவரை எங்கும் நடந்திராத மாபெரும் மாநாடு.  இதன் மூலம் மூவாயிரம் சிறு தொழில்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

“இந்தியாவில் ஏதோ ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதுதான் ஜனநாயகம்,” என்றார் ஜெஃப் பெசாஸ்.

இந்தியாவில் உள்ள ஆற்றல், சுறுசுறுப்பு, அதன் வளர்ச்சி் தம்மை பிரமிக்க வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியச் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள சிறு தொழில்களை கணினி மயமாக்க அமேசான் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என ஜெஃப் பெசாஸ் அறிவித்துள்ளார்.

அடுத்த நூற்றாண்டில் இந்தியா, அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தமது இந்தப் பயணத்தின் போது ஜெஃப் பெசாஸ் முக்கிய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.