எடியூரப்பா: என்னிடம் கோரிக்கைகளை முன் வைக்கலாம், மிரட்ட முடியாது

பெங்களுரு: தம்மை மிரட்டும் வகையில் பேசிய மடாதிபதிக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.  நேற்று முன்தினம் தாவணகெரே நகரில் பஞ்சமாஷாலி சமூகத்தினரின் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 இந்நிலையில் மாநாட்டில் உரையாற்றிய பஞ்சமாஷாலி மடத்தின் மடாதிபதி வசனாநந்தா, தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேஷ்  நிரானி என்ற எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டுமென முதல்வரிடம்  கோரிக்கை வைத்தார். இதையடுத்து திடீரென அவர் பேசும் தொனி மாறியது. 

முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த பஞ்சமாஷாலி சமுதாயத்தினரும் ஆளும்தரப்பைப் புறக்கணித்துவிடுவர் என்றார் வசனாநந்தா. அவர் சொன்னதைக் கேட்டு கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் எடியூரப்பா, பொதுமேடையில் இவ்வாறு பேசுவது சரியல்ல என்றார். 

இதையடுத்து முதல்வரை நோக்கி இருக்கையில் அமருங்கள் என்று சொன்ன மடாதிபதி வசனாநந்தா தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“உங்கள் (எடியூரப்பா) தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், இந்த ஆட்சி நல்லவிதமாக நடக்க வேண்டுமென்றால் பஞ்சமாஷாலி சமூகத்திலிருந்து குறைந்தபட்சம் 3 பேரையாவது அமைச்சரவையில் சேர்க்கவேண்டும்,” என்றார் மடாதிபதி வசனாநந்தா. 

இவ்வாறு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய மடாதிபதிக்கு அதே மேடையில் உடனுக்குடன் பதிலடி கொடுத்தார் முதல்வர் எடியூரப்பா. மடாதிபதி கூறியதையெல்லாம் தம்மால் செய்யமுடியாது என்று குறிப்பிட்ட அவர், யார் வேண்டுமானாலும் தம்மிடம் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்றும், மாறாக மிரட்டமுடியாது என்றும் தெரிவித்தார்.

“முதல்வர் இருக்கையில் என்னை அமர வைப்பதற்காக 17 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது. 

“என்னிடம் தனிப்பட்ட வகையில் நேருக்கு நேர் பேசி, முன்வைக்க வேண்டிய கோரிக்கையை இவ்வாறு பொதுமேடையில் பேசக்கூடாது. நான் தேவையில்லை என்று நினைத்தீர்கள் எனில் என் பதவியைத் தூக்கி எறிந்து விடுகிறேன்,” என்றார் எடியூரப்பா. 

பொதுமேடையில் மடாதிபதியும் முதல்வரும் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அம்மடாதிபதிக்கு பாஜக பிரமுகர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.