'டிக்டாக்' காணொளி எடுத்தபோது விபரீதம்; இளைஞர் பலியான பரிதாபம்

சண்டைக் காட்சியைப் படமாக்கி டிக்டாக்கில் வெளியிடும் முயற்சி விபரீதத்தில் முடிந்ததால் 17 வயது மாணவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவரின் நண்பர்கள் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

மால்டாவைச் சேர்ந்தவர் கரீம் ஷேக். நேற்று இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். 

அதன்படி கரீம் ஷேக்கை நண்பர்கள் ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் அவரது முகத்தை பிளாஸ்டிக் உறையால் மூடினர். 

பத்து நிமிடங்களுக்குள்  அவர் ஏதேனும் செய்து தன் கட்டுக்களை அவிழ்த்து தப்பிக்க வேண்டும். அவரது அந்த முயற்சியை காணொளியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் மூவரின் திட்டம். 

ஆனால், பிளாஸ்டிக் உறையால் முகம் மூடப்பட்டதும் கரீம் ஷேக்குக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை நண்பர்கள் இருவரும் கவனிக்கவில்லை. அவர் உயிருக்காகப் போராடியதை நண்பர்கள் அவர் தப்பிக்க முயற்சி செய்வதாக கருதியுள்ளனர். 

பத்து நிமிடங்களுக்குப் பிறகு கரீம் ஷேக் தோற்றுவிட்டதாக கிண்டல் செய்தபடியே பிளாஸ்டிக் உறையை எடுத்த போதுதான் அவர் இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். 

கரீம் ஷேக் டிக்டாக் காணொ ளிகள் எடுப்பதில் தீவிரமாக இருந்ததாகவும் அவரது நண்பர்களும் இது தொடர்பாக உற்சாகப்படுத்தியதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவ்வப்போது காணொளிகள் தயாரிக்க ஆபத்தான முயற்சிகளில் கரீம் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு