வங்கிகளில் ரூ.1,700 கோடி கடன் பெற்று மோசடி செய்த இருவர் அதிரடியாகக் கைது

ஹைதராபாத்: பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த இருவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஜி.எஸ்.சி. ராஜு. சொந்த நிறுவனம் வைத்துள்ள இவர் தனது நண்பர் பிரசாத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு வங்கிகளை அணுகி கடன் கேட்டுள்ளார். 

சொந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இருவரும் பல கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளனர். இதை நம்பி பல வங்கிகள் இருவருக்கும் 1,700 கோடி ரூபாய் கடனாக தந்துள்ளன. 

கடனாகப் பெற்ற தொகையை 33 துணை நிறுவனங்களில் முதலீடு செய்ததாக ராஜுவும் பிரசாத்தும் கணக்குக் காட்டி உள்ளனர். ஆனால், இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் இருவரும் இழுத்தடிக்கவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டன. 

அதன் முடிவில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜு, பிரசாத் ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

ராஜுவின் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...
Load next