கூலிப்படையை ஏவி பணத்துக்காக பெற்ற தாயைக் கொன்றவர் கைது

திருவனந்தபுரம்: பணத்துக்காக பெற்ற தாயைக் கூலிப்படை வைத்துக்  கொலை செய்த ஆடவரைக் கேரள போலிசார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்துள்ளனர். 

கோழிக்கோட்டை அடுத்துள்ள முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிர்ஜு. 53 வயதான இவர், இன்னொரு கொலையையும் செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. 

பிர்ஜுவின் தந்தை கடந்த 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து தனது தாயார் ஜெயவள்ளியுடன் வசித்து வந்தார் பிர்ஜு. 

இந்நிலையில் கணவர் பெயரிலிருந்த சில நிலங்களை விற்றுக் காசாக்கிய ஜெயவள்ளி அதனை மூன்றாகப் பிரித்து தனக்கும் ஒரு பங்கை வைத்துக்கொண்டு, மீதத்தை தனது இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிர்ஜு தனக்குக் கிடைத்த தொகையை ஆடம்பரமாகச் செலவிட்டதில் அது விரைவாக கரைந்து போனது. இதையடுத்து தனக்குப் பணம் கொடுத்து உதவுமாறு  தாயை அணுகியுள்ளார். 

ஆனால் ஜெயவள்ளி பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த பிர்ஜு கூலிப்படையை அணுகியுள்ளார். கூலிப்படைத் தலைவன் இஸ்மாயில் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியுள்ளார் பிர்ஜு.

இதையடுத்து ஜெயவள்ளியைத் தீர்த்துக் கட்டியுள்ளார் இஸ்மாயில். தனது தாய் தற்கொலை செய்துகொண்டதாகச் சித்திரித்து கொலை வழக்கில் சிக்காமல் தப்பித்தார் பிர்ஜு. எனினும் பேசியபடி இஸ்மாயிலுக்கு அவர் பணம் தரவில்லை. இதனால் கோபமடைந்த இஸ்மாயில் நடந்த கொலை குறித்து போலிசிடம் விவரம் சொல்லப் போவதாக மிரட்டல் விடுக்க, அவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்து மது கொடுத்து மயக்கி கொலை செய்துள்ளார் பிர்ஜு. அதன் பின்னர் நீலகிரி அருகே ஒரு வீட்டை வாங்கி அதில் தன்  மனைவி, குழந்தைகளுடன் பிர்ஜு குடியேறியுள்ளார்.

இந்நிலையில் கேரள போலிசார் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். பிர்ஜுவின் தொலைபேசி உரையாடல்கள், அவரது நடமாட்டம் ஆகியவற்றை வைத்து அவர்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த போலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.