மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடிய கணவர்கள்; வலைத்தளங்களில் பிரபலமானது

தென்காசி: வெளிநாடுகளில் நடப்பதுபோன்று கணவன்  மனைவியை முதுகில் சுமந்துகொண்டு ஓடும் விசித்திரமான போட்டி தென்காசி மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பரவி வருகிறது. 

மனைவியை கணவனும் கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் பொழுதுபோக்கான விளையாட்டாக பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இது பிரபலமானது.

இந்நிலையில் தற்போது இந்தப் போட்டி தமிழகத்தின் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளது.

சாலையில் நடத்தப்பட்ட இப் போட்டியில் தங்கள் மனைவிகளை குழந்தைகளைப் போல கையில் தூக்கிக்கொண்டும் முதுகில் உப்பு மூட்டையாக சுமந்துகொண்டும் ஓட கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.

போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக்கொண்டு ஓடினர். 

மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன் மார்கள் மூவர் தங்கள் மனைவியரை நடுரோட்டில் பொத்தென்று போட்டு  உடைத்தனர். அத்துடன்  அவர்களும் கீழே விழுந்தனர்.

மனைவியரை உப்புமூட்டை போல சுமந்துசென்ற இரு கணவர்கள் மட்டும் வெற்றிகரமாக எல்லைக்கோட்டைத் தொட்டனர்

மூன்று  கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டதாக கூடியிருந்தவர்கள் கிண்டல் செய்தனர். 

Loading...
Load next