மர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 7 பேர் காயம்

பெங்களுரு:  மர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் சாந்தி நகர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரிஸ் தமது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருந்த போது திடீரென யாரோ ஒரு பொருளை மேடையை நோக்கி வீசினர். ஹாரிஸ் அருகே விழுந்ததும் அந்தப் பொருள் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் எம்எல்ஏவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பார்வையாளர்கள் பயத்தில் அலறியடித்தபடி ஓட்டம் பிடிக்க,  எம்எல்ஏ ஹாரிஸின் உதவியாளர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூவர் பெண்கள்.

மர்மப் பொருளை வீசியது யார், எந்த நோக்கத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது எனப் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் பல தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ மீது வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் வீசப்பட்டிருப்பதால் பெங்களுருவில் பதற்றம் நிலவுகிறது.

அந்த மர்மப் பொருளின் சிதறல்களைச் சேகரித்து போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.