சர்க்கரை மூலம் இந்தியாவை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் மலேசியா

இந்தியாவிடமிருந்து அதிக சர்க்கரையை வாங்க மலேசியாவின் பெரிய சர்க்கரை விற்பனை நிறுவனம் கூறியிருப்பதாக சில தகவல்களை மேற்கோள் காட்டி ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. 

மலேசியாவிடமிருந்து பாமாயிலை வாங்க இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் அதனைச் சாந்தப்படுத்தும் முயற்சியாக அதிக சர்க்கரை கொள்முதல் செய்யும் முடிவை எம்எஸ்எம் மலேசியா ஹோல்டிங்ஸ் என்னும் அந்த நிறுவனம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 200 மில்லியன் ரிங்கிட் (S$66.4 மில்லியன்) மதிப்புள்ள 130,000 டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை அந்த நிறுவனம் வாங்கும் என்கிறது அச்செய்தி.

கடந்த ஆண்டு முழுமைக்கும் அந்நிறுவனம் கொள்முதல் செய்த சர்க்கரையின் அளவு 88,000 டன்.

உலகின் ஆகப்பெரிய செம்பனை எண்ணெய் (பாமாயில்) உற்பத்தியாளரான எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் குழுமத்தின் சர்க்கரை சுத்திகரிப்புப் பிரிவுதான் எம்எஸ்எம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மலேசிய அரசாங்கத்தின் ஃபெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பிரிவுதான் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ்.

தனது கொள்முதலை அதிகரித்திருப்பதற்கு பாமாயில் விவகாரம் ஒரு காரணம் என்று எம்எஸ்எம் குறிப்பிடவில்லை என்றபோதிலும் அதுவும் ஒரு காரணம் என இரு தரப்புகள் குறிப்பிடுகின்றன.

இந்திய அரசாங்கத்தின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மீட்பு, குடியுரிமைச்  சட்டத் திருத்தம் ஆகிய நடவடிக்கைகளை மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது விமர்சித்ததைத் தொடர்ந்து அந்நாட்டிடம் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுப்பாடுகளை அறிவித்தது.

#தமிழ்முரசு #மலேசியா #இந்தியா #சர்க்கரை #செம்பனை