குற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம்: வழக்கறிஞர் புகார்

புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி வினய்க்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் புகார் எழுப்பி உள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வினய் சர்மா சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் ஏ.பி. சிங் இக்குற்றச்சாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். 

வினய் சர்மாவுக்கு சிறை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைக் காவல்துறை இதுவரை அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“திகார் சிறையில் வினய் சர்மா சிறையில் 2 மற்றும் 3ஆம் அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், அவர் சிறை எண் 4க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

“அங்குதான் அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளார். சிறையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சான்றுகளைப் பார்க்க விரும்புகிறோம்,” என்றார் வழக்கறிஞர் ஏ.பி. சிங். 

மேலும் வினய் சர்மாவுக்குக் கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சரியான உடல்நிலையில் இல்லை என்றும் சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். 

எனினும் வினய் சர்மாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அடுத்தடுத்து தடைகள் முளைத்து வருகின்றன. 

அதிபர் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து மற்றொரு குற்றவாளியான முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார். 

இதற்கான மனுவை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். 

நான்கு குற்றவாளிகளில் முகேஷ் மட்டுமே அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். மற்ற மூவரும் அந்த வாய்ப்பை இன்னும் பயன்படுத்தவில்லை. 

மேலும் அவர்களில் இருவருக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான சட்ட வாய்ப்பும் உள்ளது. 

இவ்வாறு சட்ட ரீதியான வாய்ப்புகளைக்  குற்றவாளிகள்  பயன்

படுத்துவதால் அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.