எரிவாயு திட்டத்தை எதிர்த்து காவிரி கிராமங்கள் தீர்மானம்

எரிவாயு திட்டத்தை எதிர்த்து காவிரி கிராமங்கள் தீர்மானம்

1 mins read
4b5d3c49-a614-4d73-88f9-12a124c1f095
தமிழ்நாட்டில் பல கிராமத்தினரும் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்களை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். படம்: தமிழக ஊடகம் -

தஞ்சாவூர்: காவிரி டெல்டா வட்டாரத்தில் உள்ள எல்லா கிராமங்களும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி எரிவாயுத் திட்டத்திற்கு (ஹைட்ரோகார்பன்) எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

வருவாய்த் துறை அதிகாரிகள் இதனை அறிவித்தனர்.

எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள், துரப்பண பணிகளில் ஈடுபடும்போது சுற்றுப்புற அமைப்பிடம் இருந்தும் பணி நடக்கும் வட்டாரத்தைச் சேர்ந்த மக்களிடம் இருந்தும் அனுமதி பெறவேண்டாம் என்று அண்மையில் மத்திய அரசாங்கம் அறிவித்தது. என்றாலும் டெல்டா கிராமங்கள் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக திட்டவட்டமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் உறுதியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக அரசியல்வாதிகளும் உரக்க குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி தருவதை மறுபரிசீலனை செய்யும்படி அதிமுக தரப்பில் இருந்து பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று ஐந்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.