திறன்பேசி சந்தையில் முந்துகிறது இந்தியா

திறன்பேசி சந்தையில் முந்துகிறது இந்தியா

2 mins read

புதுடெல்லி: சீன வகை திறன்பேசிகளை அதிகம் உற்பத்தி செய்ததன் மூலம் திறன்பேசிகளுக்கான உலகின் இரண்டாவது ஆகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்கா மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா 158 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளது.

அதே வேளையில், அமெரிக்கா 153 மில்லியன் திறன்பேசிகளை மட்டுமே விற்றுள்ளது என்பது அண்மைய ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது.

பல்வேறு நவீன அம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கும் சீன வகை திறன்பேசிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் மின்வர்த்தகம் வேகமாக வளர்ச்சி காண்பதும், திறன்பேசி சந்தை விரிவடைய காரணமாக உள்ளது.

கடந்த ஆண்டு இந்திய சந்தையை சீன வகை திறன்பேசிகளே 72 விழுக்காடு அளவிற்கு ஆக்கிரமித்திருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு இந்த ஆக்கிரமிப்பு 60 விழுக்காடாக இருந்தது.

இந்திய திறன்பேசி சந்தை கடந்தாண்டு 7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்றும் சீனாவின் சந்தை எதிர்பாராத சரிவைச் சந்தித்துள்ளது என்றும் அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் 388 மில்லியன் திறன்பேசிகளை சீனா தயாரித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் கைபேசிச் சந்தையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் இடைவெளி குறைந்துவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும் பயன்படுத்தப்பட்ட கைபேசிகளை குறைந்த விலைக்கு வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதால் புதிய திறன்பேசிகளின் விற்பனை கணிசமான அளவுக்கு பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனால்தான் திறன்பேசிச் சந்தையில் சீனாவை முந்த இந்தியாவுக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்தியாவில் கைபேசி பயன்படுத்துவோரில் 55 விழுக்காட்டினர் மட்டுமே 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சேவையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, திறன்பேசிகளுக்கான தேவையும் அவற்றின் விற்பனை அளவும் சீராக உயரும் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.