சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் செல்லும் தனி விமானம்

சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் செல்லும் தனி விமானம்

2 mins read

மும்பை: சீனாவில் புதுவகை கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சீனாவின் வூஹான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 700 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கிருமித்தொற்றுக்கு அஞ்சி அவர்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் உணவு கிடைக்காமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள இந்தியர்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் சீனாவில் கல்வி பயிலும் மாணவர்கள் தற்போது கல்லூரி விடுதிகளில் தங்கி இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சீனாவில் கொரோனா கிருமி பாதிப்புள்ள பகுதிகளிலுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கு தனி விமானம் ஒன்றை அனுப்ப இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதை அடுத்து மும்பையில் இருந்து சீனா செல்ல, 423 இருக்கைகள் கொண்ட ஏர் இந்தியாவின் 'போயிங் 747' விமானம் தயாராக உள்ளது. இந்த விமானத்தில் மருத்துவக்குழு ஒன்றும் செல்ல இருக்கிறது.

சீன அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த விமானம் அங்கு செல்லும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நேப்பாளத்தை எல்லையாகக் கொண்ட உத்தரப் பிரதேசம், பீகார், உத்தரகண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நேப்பாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வரும் அனைவரையும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்குமாறு 5 மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.