ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவிய ஆரஞ்சுப் பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவிய ஆரஞ்சுப் பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

1 mins read

பெங்களூரு: ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க தனது சொற்ப வருமானத்தில் பல்வேறு உதவிகளைச் செய்த பழ வியாபாரியின் சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆரஞ்சுப் பழ வியாபாரியான ஹரேகலா ஹஜப்பா என்ற இந்த ஆடவரின் முயற்சியால்தான் 2000ஆம் ஆண்டில் அவரது கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

அதில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர். இதையடுத்து தனது வருமானத்தில் இருந்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தும், கடன் பெற்றும் கிராமப் பள்ளிக்காக சொந்த நிலம் வாங்கினார் ஹஜப்பா.

இத்தனைக்கும் இவர் படிக்காதவர். பழம் விற்றுக்கொண்டிருந்த போது, வெளிநாட்டுச் சுற்றுப்பயணி ஒருவர், இவரிடம் பழத்தின் விலையைக் கேட்டுள்ளார். ஆனால் துளு மொழி மட்டுமே அறிந்த ஹஜப்பாவால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை.

இதையடுத்தே தனது கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

ஹஜப்பாவின் சேவை குறித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பின்னர்தான் வெளியுலகுக்கு இவரைப் பற்றித் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரது சேவையை அங்கீகரித்து மத்திய அரசு விருது அளித்துள்ளது.

பொருட்கள் வாங்குவதற்காக ரேசன் கடையில் வரிசையில் காத்திருந்தபோதுதான் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.