புதுவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், புதுவை மக்களையும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவமதிப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் முதல்வர் நாராயணசாமி தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தி உள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார் கிரண்பேடி. இதில் முதல்வர் நாராயணசாமியும் கலந்துகொண்டார்.
எனினும் விருந்தின் இடையிலேயே அவர் திடீரென வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அமைச்சர்களும் வெளியேறினர்.
"தேநீர் விருந்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பத்ம விருதுகள் பெறவுள்ள மனோஜ் தாஸ் மற்றும் முனுசாமி இருவரையும் கவுரவிப்பதற்காக முதல்வர் நாராயணசாமியை அழைத்தோம். ஆனால், எந்தவித முன்னறிவிப்புமின்றி எவ்வாறு இப்படிச் செய்யலாம்? என ஆளுநர் மாளிகை கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஆளுநர் கிரண் பேடி கோபப்பட்டுள்ளார்.
"பிறகு, அங்கிருந்து முதல்வர் வெளியேறினார். இந்தச் சம்பவம் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நடந்துள்ளது," என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
எனவே முதல்வர் நாராயணசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர், பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செயல் இதுவல்ல என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
"எல்லாரையும் அழைத்து வாழ்த்துகளைச் சொல்வதற்காகத்தான் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எந்த விதிமுறைகளும் இல்லாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, தான் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவேதான், வெளிநடப்பு செய்தேன்," என்று நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர்-முதல்வர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

