பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் புகார்

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் கடன் சுமை வெகுவாக அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசின் தோல்வி காரணமாக இந்திய மக்கள் பெரும் கடனைச் சுமக்க வேண்டுமா? என அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கவுரவ் வல்லப், கடன் பிரச்சினைக்குப் பிரதமரும் நிதியமைச்சரும் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

"கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் கடன் ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அது ரூ.91.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கடன் ரூ.37.9 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது 71.36 விழுக்காடு உயர்வு ஆகும்.

"ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாசாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடாக இருந்தது, இப்போது இரு மடங்காக (10.3 விழுக்காடு) உயர்ந்துள்ளது. இது மிகுந்த கவலைக்குரிய விஷயம்," என்று கவுரவ் வல்லப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டினார்.

பாரதிய ஜனதா ஆட்சியில் தனி நபர் வருமானம் உயரவில்லை என்றும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இதேபோல் கடன் உயர்ந்தால் நாட்டு மக்கள் எப்படி இந்த கடன் சுமையைத் தாங்குவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.