மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்பவர்களிடம் இருந்து தினந்தோறும் சராசரியாக 66 கைபேசிகள் திருடப்படுவது தெரியவந்துள்ளது.
மும்பை மாநகரில் பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அங்கு தினந்தோறும் 80 லட்சம் பேர் புறநகர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் ரயில் பயணிகளிடம் கைபேசிகள் திருடப்படும் சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ரயில்வே போலிசார் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் மும்பை புறநகர் ரயில்களில் 32,476 கைபேசிகள் திருட்டு போயுள்ளதாகப் புகார்கள் பதிவாகி உள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் 88 கைபேசிகள் என்ற விகிதத்தில் இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. திருடப்பட்ட கைபேசிகளின் மொத்த மதிப்பு 3.09 கோடி ரூபாய் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு திருட்டு போகும் கைபேசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 24,010 கைபேசிகள் திருடப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு 66 கைபேசிகள் என்ற விகிதத்தில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருடப்பட்ட கைபேசிகளின் மதிப்பு 2.99 கோடி ரூபாய் எனக் காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் 2018ஆம் ஆண்டு 2,517 கைபேசிகளும், கடந்தாண்டு 2,319 கைபேசிகளும் மட்டுமே திருடர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.