புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.
துப்பாக்கிச் சூட்டில் இளையர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து துப்பாக்கியால் சுட்டவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று புதுடெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த ஒருவர், திடீரென போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
கறுப்பு மேலாடை அணிந்திருந்த அந்த ஆள், "இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை," என்று கூச்சலிட்டபடியே துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஆடவர் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் யார், எதற்காக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், அவரது பின்னணி என்ன என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

