கோல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஹிதா பாத் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஜலங்கிப் பகுதியில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக நகரிக் மஞ்சா என்ற குடியிருப்புவாசிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது வன்முறையாக வெடித்தது. இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனருல் இஸ்லாம் (62), ஷேக் அலாவுதீன் (17) என்பது தெரியவந்தது. அனருல் இஸ்லாம் அப்பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது வன்முறை கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
ஷேக் அலாவுதீன் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் ஜலங்கிப் பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். இந் நிலையில் வன்முறையில் சிக்கி மாண்டார். துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வன்முறைக்குத் திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அபுதாகிர் மறுத்துள்ளார்.

