பிறந்தநாள் விழாவுக்காக 23 குழந்தைகளை வரவழைத்து அவர்களை பிணைக்கைதிகளாக்கிய ஆடவர்

பிறந்தநாள் விழாவுக்காக 23 குழந்தைகளை வரவழைத்து அவர்களை பிணைக்கைதிகளாக்கிய ஆடவர்

2 mins read
97ef0132-c654-442c-a626-fd62a53eeb8e
தீவிரவாத ஒழிப்புப் படை மற்றும் கமாண்டோ படையினரும் வீட்டை சுற்றி குவிக்கப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் 23 குழந்தைகள் உட்பட சில பெண்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அவர்களை விடுவிப்பதற்கான பேச்சு வார்த்தையில் இணக்கம் காட்டாததால் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பதாம். கொலை வழக்கில் கைதாகி சிறை சென்ற இவர், பிணையில் வெளியே வந்தபோது தம் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 23 குழந்தைகள், சில பெண்கள் ஆகியோர் நேற்று (ஜனவரி 30) அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்களுள் ஆறு மாதக் குழந்தையும் இருந்தது.

மது அருந்தியிருந்த சுபாஷ் அவர்களை அனைவரையும் பிணைக்கைதிகளாக்கி, கவுதம் என்னும் நபர், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், போலிஸ் அதிகாரி ஆகியோர் அந்த இடத்துக்கு வர வேண்டும் என்று கூறியதாகவும் சமாதானம் பேசச் சென்ற சதீஷ் சந்திரா துபே என்ற இளைஞரை சுபாஷ் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார், சுபாஷின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி சுபாஷ் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது.

அதில் மூன்று போலிசாரும் பொதுமக்களும் காயமடைந்தனர். மேலும் தீவிரவாத ஒழிப்புப் படை மற்றும் கமாண்டோ படையினரும் வீட்டை சுற்றி குவிக்கப்பட்டனர்.

பிணைக்கைதிகளை மீட்கும் பொருட்டு, வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த போலிசார் சுபாஷை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.

தம் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பிணையாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சுபாஷ் கோரிக்கை விடுத்ததாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

சுபாஷ் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கிருந்தோர் சுபாஷின் மனைவியைக் கடுமையாகத் தாக்கியதாகவும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுபாஷின் குழந்தையின் நிலை பற்றிய தகவல் இல்லை.

#தமிழ்முரசு #சுபாஷ் #குழந்தைகள்பிணைக்கைதி

குறிப்புச் சொற்கள்