'கொரோனா' கிருமி அதிவேகமாக பரவி வரும் சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்பதற்காக 'ஏர் இந்தியா' விமானம் ஒன்று நேற்று சீனா புறப்பட்டது.
வூஹான் நகர கல்வி நிலையங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களிலும் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 600 இந்தியர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்குள்ள தமது நாட்டின் மக்களை பல்வேறு நாடுகள் வெளியேற்றி வருவதால் இந்தியாவும் குடிமக்களை மீட்க விமானத்தை அனுப்பியுள்ளது.
ஆரம்பத்தில் வூஹான் நகரிலிருந்து வெளியேற சீன அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
இதனால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சீன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இந்தியர்களை மீட்க அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதன் காரணமாக சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து 'போயிங் 747' ரக விமான நேற்று சீனா புறப்பட்டது. முதற்கட்டமாக 325 இந்தியர்களை வூஹானிலிருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
விமானத்தில் ஒரு மருத்துவக் குழுவும் செல்கிறது. அக்குழுவினர், இந்தியப் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சுகாதாரப் பரிசோதனைகளை நடத்தி அவர்களுடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவிருக்கின்றனர்.
இந்த விமானம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா கிருமி பரவல் இல்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 242 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

